ஓ.என்.ஜி.சி. நிறுவன பணிகளை நிறுத்த வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


ஓ.என்.ஜி.சி. நிறுவன பணிகளை நிறுத்த வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2020 5:00 AM IST (Updated: 8 March 2020 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஓ.என்.ஜி.சி. நிறுவன பணிகளை நிறுத்த வலியுறுத்தி கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோட்டூர்,

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. சார்பில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கைவிடும்படி பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்காக முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா திருவாரூரில் நேற்று நடந்தது.

இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய வருகையையொட்டி திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சோழங்கநல்லூர் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் நடைபெற்று வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவன பணிகளை நிறுத்த வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்குழு

முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சோழங்கநல்லூர் ஓ.என்.ஜி.சி. கிணறு அமைந்துள்ள இடத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்பாலன் தலைமை தாங்கினார்.

இதில் நாம் தமிழர் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story