மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 March 2020 12:15 AM GMT (Updated: 7 March 2020 7:11 PM GMT)

மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருவதாக, செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

நாகப்பட்டினம்,

மீன்பிடி தடை காலம் மற்றும் குறைவாக மீன்கள் பிடிபடும் காலங்களில், மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறோம். பாக் வளைகுடா பகுதி மீனவர்களுக்காக, 2 ஆயிரம் இழுவலை மீன்பிடி படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றிடும் சிறப்பு திட்டம் ரூ.1,600 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முதற்கட்டமாக 500 தூண்டில் மற்றும் செவுள் வலையுடன் கூடிய ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகள் கட்டப்பட்டு வருகின்றன

இந்த மாவட்டத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நான் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டேன். அதில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற திட்டங்கள் குறித்த செய்தியை இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன்.

பொய் பிரசாரம்

நாகையில் உள்ள மீன்வளப்பல்கலைக்கழகம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தலைஞாயிறு மீனவ கல்லூரிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மீன் வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர இந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எண்ணிலடங்காதது. அவற்றில் ஒரு சிலவற்றை பற்றி மட்டும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன். ஏனென்று கேட்டால், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை, மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்ற தவறான, பொய்யான, அவதூறான பிரசாரத்தை செல்லும் இடங்களில் எல்லாம் மேற்கொண்டு வருகிறார். அதற்கு பதில் அளிக்கின்ற விதத்திலே, அ.தி.மு.க. அரசு, மக்களின் குறைகளை அறிந்து, அதை களைவதற்காக நிறைவேற்றி வருகின்ற திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

குடிமராமத்து திட்டம்

குடிமராமத்து திட்டம் ஒரு அற்புதமான திட்டம். விவசாயிகளின் கனவு திட்டம். இந்த மாவட்டத்தில் மட்டும் 81 பணிகள், சுமார் ரூ.13 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளின் ஒத்துழைப்போடு, முழு பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் வாய்க்கால்களும், ஏரிகளும், குளங்களும், ஊரணிகளும் சரியான நேரத்தில் தூர்வாரப்பட்டது. இயற்கையும் கைகொடுத்து நல்ல மழை பெய்ததால், டெல்டா மாவட்டங்களில் மட்டும் கூடுதலாக சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு குறைதீர்க்கும் திட்டம்

முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் மூலம் இந்த மாவட்டத்தில் 4 ஆயிரத்து 671 மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் புதிதாக 1,805 முதியோருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டம் மூலம் நாகை மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரத்து 352 கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த 4 ஆயிரத்து 233 குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய ‘‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்’’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 97 ஆயிரத்து 906 குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ.461 கோடியே 74 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மீன் ஏலக்கூடம்

நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடம் ரூ.12 கோடியில் கட்டப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நம்பியார் நகர் கிராமத்தில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் மீன் ஏலக்கூடம் மற்றும் மீன் ஏலத்தளம் கட்டப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

காமேஸ்வரம், பு‌‌ஷ்பவனம் ஆகிய கிராமங்களில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் வலை பின்னும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளையாற்றின் குறுக்கே செர்தூர்-வேளாங்கண்ணி சாலையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

உணவு பதப்படுத்தும் பூங்கா

வேளாங்கண்ணி, நரிமணம், நாகை உள்ளிட்ட இடங்களில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு சீரான மின்சாரம் வழங்கி வருகிறோம். இந்த விழாவில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியது உள்பட ரூ.394 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டிலான 14 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். அதேபோல, 14,861 பயனாளிகளுக்கு ரூ.101 கோடியே 18 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளேன்.

வேதாரண்யம் வட்டம், கைலவனம்பேட்டை கிராமத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.49 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்படும். அதே போன்று, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அகஸ்தியன்பள்ளி கிராமத்தில் ரூ. 29 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும். மிகப்பெரிய திட்டமாக விவசாயிகளின் கனவு திட்டமாக, விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையிலே வேதாரண்யம் தாலுகாவில் 250 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா அமைத்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், ராதாகிரு‌‌ஷ்ணன், பாரதி, முன்னாள் அமைச்சர் ஜெயபால், நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிவரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன் (நாகை), சிவா (கீழ்வேளூர்), ராதாகிரு‌‌ஷ்ணன் (திருமருகல்), நற்குணன் (கொள்ளிடம்), அவை.பாலசுப்பிரமணியன் (தலைஞாயிறு), வேதையன் (கீழையூர்) மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story