இடைக்காட்டூர் தேவாலயத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர வேண்டி சிறப்பு திருப்பலி


இடைக்காட்டூர் தேவாலயத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர வேண்டி சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 8 March 2020 3:45 AM IST (Updated: 8 March 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டி இடைக்காட்டூர் திரு இருதய திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ளது திரு இருதய திருத்தலம். இந்த தேவாலயம் தமிழக அரசால் சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டது. இந்த திருத்தலத்தில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமையன்று சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். இதில் திண்டுக்கல், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்வார்கள். இந்த நிலையில் மார்ச் மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. தஞ்சை டோமனிக் தலைமையில் 16 அருட்பணியாளர்கள் திருப்பலியை நடத்தினர்.

கொரோனா வைரஸ் நோய் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர். தற்போது உலக மக்களை பெரிதும் பாதித்து வரும் இந்த கொரோனா வைரஸ் நோயிலிருந்து பொதுமக்கள் மீண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுகளை சிறப்பாக எழுதி தேர்வில் வெற்றி பெறவும், சமய நல்லிணக்கம் ஏற்படவும் திருப்பலி நடைபெற்றது. சிறப்பு திருப்பலியை முன்னிட்டு விசேஷ பிரார்த்தனைகள் நடந்தன. திருப்பலிக்கான ஏற்பாடுகளை இடைக்காட்டூர் திரு இருதய திருத்தல அருட்பணியாளர் ரெமிஜியஸ் செய்திருந்தார்.

Next Story