ராணிப்பேட்டையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்; கலெக்டர் தகவல்


ராணிப்பேட்டையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 March 2020 4:00 AM IST (Updated: 8 March 2020 2:37 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் திவ்யதர்‌ஷினி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை,

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து, ராணிப்பேட்டை மாவட்டம் புதிதாத உருவாக்கப்பட்ட பின்னர் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான தற்காலிக கலெக்டர் அலுவலகம் ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கு போதுமான பஸ் வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக கலெக்டர் திவ்யதர்‌ஷினியிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் வகையில் பஸ் போக்குவரத்து மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

ஏற்கனவே, ஆற்காடு மார்க்கத்தில் இருந்து வாலாஜா, சிப்காட் மார்க்கமாக செல்லும் பஸ்கள் ராணிப்பேட்டை புதிய பஸ் நிலையம், அரசினர் பள்ளி வழியாக சென்று வந்தது. இனி ஆற்காட்டில் இருந்து வரும் பஸ்கள் ராணிப்பேட்டை போலீஸ் நிலையம் வழியாக வந்து தீயணைப்பு நிலையம் அருகில் திரும்பி முத்துக்கடை பகுதி வழியாக செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தீயணைப்பு நிலையம் அருகே இறங்கி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லலாம்.

வாலாஜா, சிப்காட் மார்க்கத்தில் இருந்து ராணிப்பேட்டை வழியாக செல்லும் பஸ்கள் பிஞ்சி ஏரி, கிரு‌‌ஷ்ணகிரி சாலை வழியாக ஆற்காடு சென்று வந்தது. இனி வாலாஜா மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் முத்துக்கடையில் இருந்து நவல்பூர் வழியாக வந்து அரசினர் பள்ளி அருகில் திரும்பி கிரு‌‌ஷ்ணகிரி சாலை வழியாக ஆற்காடு நோக்கி செல்லும். இதன் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் நவல்பூர் பஸ் நிலையத்தில் இறங்கி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லலாம்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களின் வசதிக்காக இந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் திவ்யதர்‌ஷினி தெரிவித்துள்ளார்.

Next Story