100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த கலெக்டர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலெக்டர் முதலிடம் பிடித்தார்.
சென்னை,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி குண்டு எறிதல், கயிறு இழுத்தல், இறகுப்பந்து, கைப்பந்து, கபடி உள்ளிட்ட குழு போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்பு அவர் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பின்னர் அவர் அனைத்து துறை மகளிர்களுடன் இணைந்து மகளிர் தின வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முகமது ரசூல், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) சங்கீதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அருணா மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story