கோவை மாநகராட்சியில் எம்.எஸ்சி. மாணவிக்கு துப்புரவு பணியாளர் வேலை


கோவை மாநகராட்சியில் எம்.எஸ்சி. மாணவிக்கு துப்புரவு பணியாளர் வேலை
x
தினத்தந்தி 8 March 2020 5:30 AM IST (Updated: 8 March 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சியில் எம்.எஸ்சி. மாணவிக்கு துப்புரவு பணியாளர் வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கோவை,

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு 800 டன் முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. அதை அகற்றும் பணியில் 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சியில் 549 துப்புரவு பணியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப் பட்டது.

இதைத்தொடர்ந்து துப்புரவு பணிக்கு பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் உள்பட 7,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற 5,200 பேருக்கு நேர்காணல் நடைபெற்றது.

தேர்வு செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பணிநியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாநகராட்சி கமி‌ஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை தாங்கினார். துணை கமி‌ஷனர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.

இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய துப்புரவு தொழிலாளர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். இதில் துப்புரவு பணியாளர் வேலைக்கான பணி ஆணை பெற்ற கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த எம்.எஸ்சி. படிக்கும் மாணவியான மோனிகா (வயது23) குறிப்பிடத்தக்கவர்.

இது குறித்து மோனிகா கூறுகையில், நான் எம்.எஸ்சி. படித்து கொண்டு இருக்கிறேன். மாநகராட்சி அறிவிப்பை தொடர்ந்து என்னை போல் ஏராளமான பட்டதாரிகள் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்த பணி எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த வேலையாக இருந்தாலும், அதை திறம்பட செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம் என்றார்.

Next Story