2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மலரும் ரங்கசாமி நம்பிக்கை


2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மலரும் ரங்கசாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 7 March 2020 11:59 PM GMT (Updated: 7 March 2020 11:59 PM GMT)

வருகிற 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மலரும் என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கமலா அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினவிழா லாஸ்பேட்டையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடந்தது. விழாவுக்கு கமலா அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வைத்தியநாதன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் ரமா வைத்தியநாதன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்- அமைச்சரும் சட்டசபை எதிர்க் கட்சி தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டு மகளிர் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., என்.எஸ்.ஜெ.ஜெயபால் எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் எம்.எல்.ஏ. நந்தா சரவணன் மற்றும் மணி, செழியன், உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெண் கல்வி அவசியம்

விழாவில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பேசியதாவது:-

இந்த விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. குடும்பத்தை பெண்கள் தான் பொறுப்பாக வழி நடத்தி செல்கிறார்கள். பெண்கள் படித்தால் குடும்பத்தையும், தன்னை சார்ந்தவர்களையும் பார்த்து கொள்வார்கள். நாட்டில் பெண் கல்வி மிக அவசியம்.

புதுச்சேரியில் யார் ஆட்சி செய்கிறார்கள்? என்பது தெரியவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஆட்சி நடக்கிறதா? கவர்னர் ஆட்சி நடக்கிறதா? என்பது தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கும், மாநில நிர்வாகியான கவர்னருக்கும் இடையே அதிகாரம் யாருக்கு என்பதில் போட்டி நடக்கிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இதில் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மலரும்

புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு அறிவித்த எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டத்தை கொண்டுவரவில்லை. மக்கள் கேள்வி எழுப்பினால் பிறர் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்கிறார்கள். அடுத்த ஆண்டு (2021) புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மலரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story