எழும்பூர் ரெயில் நிலையத்தில் பெண்களுக்கு கையெழுத்து மூலம் வாழ்த்து தெரிவித்த ஆண்கள் ரெயில்வே பாதுகாப்புப்படை சார்பில் சிறப்பு ஏற்பாடு


எழும்பூர் ரெயில் நிலையத்தில் பெண்களுக்கு கையெழுத்து மூலம் வாழ்த்து தெரிவித்த ஆண்கள் ரெயில்வே பாதுகாப்புப்படை சார்பில் சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 8 March 2020 10:30 PM GMT (Updated: 8 March 2020 4:50 PM GMT)

மகளிர் தினத்தை முன்னிட்டு எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை சார்பில் வைக்கப்பட்டிருந்த ‘பேனரில்’ கையெழுத்து மூலம் பெண்களுக்கு, ஆண்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சென்னை,

சர்வதேச மகளிர் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தங்களது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும், நண்பர்களுக்கும், ஆண்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று தெற்கு ரெயில்வே பாதுகாப்புப்படை ஐ.ஜி. பிரேந்திரகுமார் உத்தரவின்பேரில் அனைத்து ரெயில் நிலையத்திலும், ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மகளிர் தினத்தை கொண்டாடினர்.

அந்தவகையில் சென்னை கோட்டத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை கமி‌‌ஷனர் செந்தில் குமரேசன் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையம், தாம்பரம், அரக்கோணம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட அனைத்து ரெயில் நிலையத்திலும், கையெழுத்து மூலம் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரெயில் நிலையத்துக்கு வந்த ஆண் பயணிகள், பெண்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் ஏற்பாடு செய்திருந்த ‘பேனரில்’ மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்து கையெழுத்திட்டனர். ரெயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி அங்கிருந்த பெண் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

அனைவரும் வாழ்த்து ‘பேனரில்’ மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் வந்து கையெழுத்து மூலம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து சென்னை சூளைமேட்டை சேர்ந்த பயணி மீனா கூறும்போது, ‘‘பெண்கள் வீட்டிலேயே அடைக்கப்பட்டிருந்த காலம் மாறி, சுதந்திரமாக வெளியே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல், விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதித்து கொண்டிருக்கிறார்கள். மகளிர் தினத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

Next Story