மாசிமக பெருவிழாவையொட்டி திருமானூரில் ஜல்லிக்கட்டு; காளைகள் முட்டியதில் 18 பேர் காயம்


மாசிமக பெருவிழாவையொட்டி திருமானூரில் ஜல்லிக்கட்டு; காளைகள் முட்டியதில் 18 பேர் காயம்
x
தினத்தந்தி 8 March 2020 11:30 PM GMT (Updated: 8 March 2020 7:00 PM GMT)

மாசிமகத் பெருவிழாவையொட்டி திருமானூரில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் காளைகள் முட்டியதில் 18 பேர் காயம் அடைந்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் மாசிமகத் பெருவிழாவையொட்டி நேற்று ஊரின் நடுவே உள்ள தெருவில் வாடிவாசல் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் தலைமை அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் மற்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். இதில் பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக இப்போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

18 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் மொத்தம் 367 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருமேனி, மோகன்தாஸ் ஆகியோரின் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் காளைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மகன் வினீத்ராஜ்(வயது 19) என்பவர் மட்டும் உயர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். காலை 10.15 மணி அளவில் தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டு மதியம் 2.45 மணி அளவில் முடிவடைந்தது. இதில் தாசில்தார் கதிரவன், அ.தி.மு.க. திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். 

Next Story