நீடாமங்கலத்தில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் முதல்-அமைச்சர் அறிவிப்பு


நீடாமங்கலத்தில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 March 2020 12:30 AM GMT (Updated: 8 March 2020 8:14 PM GMT)

நீடாமங்கலத்தில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என திருவாரூரில் நடந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

திருவாரூர்,

டெல்டா பகுதியில் விவசாயம் செழிக்க வேண்டுமென்றால், நீர்ப்பாசன கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். இதற்காக ஜி.ஏ.கெனால் மேம்பாட்டுத்திட்டம் ரூ.2 ஆயிரத்து 298 கோடி செலவில் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான நிதியை ஆசிய வங்கி மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது.

இது தவிர, காவேரி உபவடிநிலம் பாசன அமைப்புகளை மேம்படுத்த ரூ.5 ஆயிரத்து 590 கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன நிதி உதவி பெற்று இத்திட்டத்திற்கான தொடக்க விழாவும் விரைவில் நடைபெற உள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் இப்பகுதி நீர்பாசன கட்டமைப்பை மேம்படுத்த செலவிடப்பட்டு விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை இந்த அரசு ஏற்படுத்தும்.

உணவு பதப்படுத்தும் தொகுப்பு

விவசாய விளைப்பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டுமென்றால், உணவு பதனிடும் தொழில் பெருக வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பும் பெருகும். அதனால்தான் இந்த அரசு தலா 10 ஏக்கரில் 8 உணவு பதப்படுத்தும் மையங்களை சேலம், திண்டுக்கல், கிரு‌‌ஷ்ணகிரி, கடலூர், தேனி, மதுரை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைக்க மத்திய அரசின் அனுமதியை பெற்றுள்ளது. இந்த முயற்சியை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், மூங்கில்குடி கிராமத்தில் நன்னிலம் அரசு விதைப்பண்ணையில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் டெல்டா மாவட்ட பிரதான பயிரான அரிசி சார்ந்த உணவு பதப்படுத்தும் தொகுப்பு அமைக்கப்படும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிதம்பரம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்ட பகுதிகளில் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில், மொத்தம் ரூ.15 கோடி செலவில் ஒருங்கிணைந்த வேளாண் வணிக மாதிரி அங்காடிகள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாதிரி அங்காடியிலும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான நவீன சந்தை வசதிகளும், இடுபொருட்கள் விற்பனை மையமும், பல்உணவு முற்றம், சிப்பம் கட்டும் அறை, குளிர்பதன கிடங்கு, வணிக தொடர்பு மையங்கள் அமைத்து தரப்படும்.

பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்

நெல் ரகங்களின் பாதுகாவலர் மறைந்த நெல் ஜெயராமனின் நினைவை போற்றும் வகையில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.

பல்வேறு தோட்டக்கலை உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியினை அதிகப்படுத்துவதுடன், பாதுகாக்கப்பட்ட சூழலில் சாகுபடி செய்யும் முறைகளான பசுமைக்குடில் சாகுபடி, நிழல்வலை குடில் சாகுபடி, பந்தல் சாகுபடி, நிலப்போர்வை மற்றும் சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி, அவர்களது வருமானத்தை உயர்த்தும் நோக்கில், டெல்டா மாவட்டங்களில் 7,500 ஏக்கர் பரப்பளவில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

கும்பகோணத்தில் வெற்றிலை சிறப்பு மையம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வெற்றிலை பயிருக்கான சிறப்பு மையம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

பாரம்பரியமாக முந்திரி சாகுபடி செய்யப்படும் கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அடர் நடவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முந்திரி சாகுபடி செய்வதன் மூலம் முந்திரி விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைத்திடும் வகையில் 2,500 ஏக்கர் பரப்பில் முந்திரி அடர் நடவு சாகுபடி செய்வதற்கான திட்டம் ரூ.6 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும். டெல்டா மாவட்டங்களில் புதிதாக விதை சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் மற்றும் கிடங்கு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story