திருப்பூரில் 15-ந் தேதி மருத்துவக்கல்லூரி தொடக்க விழா: மேடை அமைக்கும் பணிக்கான கால்கோள் விழா - அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்
திருப்பூரில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான தொடக்க விழா 15-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான கால்கோள் விழாவில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. ரூ.125 கோடியில் 4 கட்டிடங்களில் ஆஸ்பத்திரியும், ரூ.107 கோடியில் 2 கட்டிடங்களில் அரசு மருத்துவக்கல்லூரியும், ரூ.104 கோடியில் 15 கட்டிடங்களுடன் குடியிருப்பு வளாகம் உள்பட மொத்தம் ரூ.336 கோடியே 96 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் அமைய உள்ளது.
இங்கு உடற்பயிற்சி கூடம், கலையரங்கம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மின்தூக்கி மற்றும் சூரியஒளி மின்சார வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, வங்கி, தபால் நிலையம், ஓட்டல் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.
இந்த புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 15-ந் தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.
விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்குகிறார்.
இதையொட்டி மருத்துவமனை வளாகத்தில் விழா மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா நேற்று காலை நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் கால்கோள் விழா நடப்பட்டது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதை தொடர்ந்து மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் திருப்பூரில் குடியேறியுள்ளனர். இதனால் இங்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசியம். அதன் அடிப்படையில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 21 கட்டிடங்களுடன் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைய உள்ளது. 55 ஏக்கர் பரப்பளவில் அரசு ஆஸ்பத்திரி வளாகம் உள்ளது. இதில் 14.80 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடங்கள் அமைய உள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது. விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். கால்நடை இணை இயக்குனர், துணை இயக்குனர் மற்றும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது. அம்மா ஆம்புலன்ஸ் மூலமாக சென்று கிராமங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), தனியரசு(காங்கேயம்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்தியபாமா, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சண்முகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் தவமணி, ரவி, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் வள்ளி, பொது சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story