பெங்களூருவில் வசித்து வரும் ஏழை-எளிய மக்கள் பயன்பெறுவார்கள் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்


பெங்களூருவில் வசித்து வரும் ஏழை-எளிய மக்கள் பயன்பெறுவார்கள் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 8 March 2020 11:21 PM GMT (Updated: 8 March 2020 11:21 PM GMT)

ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பெங்களூருவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு முதல்- மந்திரி எடியூரப்பா நேற்று அடிக்கல் நாட்டினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் வசித்து வரும் ஏழை-எளிய மக்களுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. முதல்-மந்திரியாக சித்தராமையா இருந்த போது இந்த அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் கர்நாடக வீட்டு வசதித்துறை சார்பில் ஏழை மக்களுக்காக ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் முதல் கட்டமாக 932 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி கட்டிட கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா பெங்களூரு தாசரஹள்ளியில் உள்ள கானிகேரஹள்ளி கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு வீடு கட்டும் திட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அடிக்கல் நாட்டி வீடுகட்டும் பணிகளை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:-

ஏழை மக்கள் நிம்மதியாகவும், சுயமரியாதையாகவும் வாழ, இந்த மிகப்பெரிய வீட்டு வசதி திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதேபோல் நகரின் பிற பகுதிகளில் இத்தகைய குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும். பெங்களூருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்டு, அதில் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க உள்ளோம். மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அதை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

நகரின் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்டு, அவற்றை ஏலம் விட இருக்கிறோம். அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் சில திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஒரு லட்சம் வீடுகள் கட்டி ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இந்த திட்ட பணிகள் தொடங்கி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இதில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி சதானந்தகவுடா கலந்து கொண்டு பேசுகையில், “இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் மத்திய அரசு ஒரு வீட்டுக்கு ரூ.1½ லட்சம் வழங்குகிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த கட்டிட கட்டுமான பணிகள் நிறைவடையும். இதில் ஒரே நாளில் ஏழை மக்கள் கிரக பிரவேசம் செய்யும் வகையில் அமைய வேண்டும்” என்றார்.

வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா பேசும்போது, “பெங்களூருவில் அடுத்த ஆண்டுக்குள் 5 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளோம். இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள், தகுதியான பயனாளிகளை தேர்ந்தெடுத்து, வீடுகளை ஒதுக்க வேண் டும். இந்த கட்டிட பணிகள் தரமாக இருக்க வேண்டும். இதை அதிகாரிகள் கவனித்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், “தாசரஹள்ளியில் அதிகளவில் அரசு நிலம் உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் 932 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கு 3,500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரிக்க கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதித்துறைக்கு மாநிலத்தில் 2,500 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்துள்ளோம்” என்றார்.

இந்த விழாவில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story