ஆம்பூரில் போலீசார் அதிரடி சோதனை: வீட்டில் தயாரித்த 500, 200 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது - மும்பையில் புழக்கத்தில் விட்டனர்
ஆம்பூர் அருகே வீட்டில் 500, 200 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட 2 பேரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆம்பூர்,
வேலூர், மெயின் பஜார் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 43), அரிசி வியாபாரி. இவர் மீது மராட்டிய மாநிலம், மும்பை தாராவி அண்டோபில் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வீடு புகுந்து ரூ.5 லட்சம் திருடியதாக வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பாஸ்கர் அடிக்கடி மும்பைக்கு சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மராட்டிய மாநிலம், சைன் பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக சைன் பகுதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்பாட்டீல் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் கையில் பையுடன் நின்றுகொண்டிருந்த பாஸ்கரை பிடித்து விசாரித்த போது, அவரிடம் கட்டுக்கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், கள்ளநோட்டுகளை திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் இருந்து எடுத்து வந்ததாக போலீசாரிடம் கூறினார். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ்பாட்டீல், போலீஸ்காரர்கள் அம்ரே, பாட்டீல், கிரேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் பாஸ்கரை ஆம்பூருக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் உதவியுடன் ஆம்பூர் அருகே உள்ள அய்யனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் (42) என்பவரது வீட்டை சுற்றி வளைத்து, உள்ளே சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கட்டுக்கட்டாக 500 மற்றும் 200 ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுக்கும் பிரிண்டர், பேப்பர்கள், கிரீன் பேப்பர்கள், கத்தரிக்கோல், பேப்பரை கட் செய்யும் கருவி ஆகியவை இருந்தன.
இதனையடுத்து போலீசார் அங்கிருந்து 7 லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் கள்ளநோட்டுகளையும், பிரிண்டர், பேப்பர்கள், கிரீன் பேப்பர்கள், கத்தரிக்கோல், பேப்பரை கட் செய்யும் கருவி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பாஸ்கர் மற்றும் சரவணனை கைது செய்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து 2 பேரையும் ஆம்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மும்பைக்கு அழைத்து சென்றனர்.
கள்ளநோட்டு வழக்கில் கைதான பாஸ்கர் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் இருந்துள்ளார். அப்போது அங்கு சிறையில் மும்பையை சேர்ந்த இப்ராஹிம், திருவண்ணாமலையை சேர்ந்த முருகன், மன்னார்குடியை சேர்ந்த பிரசன்னா மற்றும் பால்ராஜ், ஆம்பூர் சரவணன் இருந்துள்ளனர்.
பின்னர் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் தாங்கள் ஜெயிலுக்கு வந்த காரணத்தை ஒவ்வொருவரும் கூறியுள்ளனர். சிறிய தவறு செய்துவிட்டு ஜெயிலுக்கு வரக்கூடாது, பெரியதாக சம்பவம் செய்துவிட்டு சிறைக்கு வரவேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று தோன்றிய போது கள்ளநோட்டுகளை தயார் செய்து புழக்கத்தில் விடலாம் என்று முடிவு செய்தனர்.
அதன்படி, சரவணின் வீட்டில் கள்ளநோட்டுகளை தயார் செய்து, அதனை பாஸ்கர் மும்பைக்கு எடுத்து சென்று இப்ராஹிம் மூலம் மும்பையில் புழக்கத்தில் விட்டு இருப்பது தெரியவந்தது.
சரவணன் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.200, ரூ.500 கள்ளநோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து தமிழகம், மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. கோடி கணக்கில் இவர்கள் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் எனவும், கள்ளநோட்டுகளை மாற்ற ஒரு கும்பல் நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு இருப்பதும், மும்பையில் தலைமறைவாகி உள்ள இப்ராஹிம் மற்றும் தொடர்புடைய நபர்களை பிடித்தால்தான் உண்மை நிலவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
கைதான சரவணன் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க ஆட்டோ டிரைவர் வேலை பார்ப்பது போல் ஆட்டோ ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் சரவணன் கவரிங் நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்கிய போது மாட்டி கொண்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அய்யனூர் பகுதியில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story