சிறுவனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு


சிறுவனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 March 2020 10:15 PM GMT (Updated: 9 March 2020 7:14 PM GMT)

திருவண்ணாமலை அருகே சிறுவனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா வெறையூர் அருகே உள்ள திருவானை முகம் காலனி பகுதியை சேர்ந்தவர் சமயத்தாள். இவரது கணவர் ராஜி. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதே ஊரை சேர்ந்த முனுசாமி மகன் சத்தியசீலன் (வயது 34). இவர் சமயத்தாளிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்து உள்ளார். திருமணத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியசீலன், சமயத்தாளின் மகன் ஆகாசை (6) கிணற்றில் வீசி கொலை செய்தார். இது குறித்து சமயத்தாள் வெறையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினார். அதில் சிறுவனை கொலை செய்த சத்தியசீலனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து போலீசார் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story