வெளிநாட்டில் இருந்து வந்த மதுரை அதிகாரிக்கு ‘கொரோனா’ அறிகுறி - ஆஸ்பத்திரியில் அனுமதி


வெளிநாட்டில் இருந்து வந்த மதுரை அதிகாரிக்கு ‘கொரோனா’ அறிகுறி - ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 9 March 2020 10:15 PM GMT (Updated: 9 March 2020 7:22 PM GMT)

வெளிநாட்டில் இருந்து வந்த மதுரை அதிகாரி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மதுரை,

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளிலும் பரவி விட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் சீனாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தநிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி விட்டது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில், கேரளாவை சேர்ந்த அதிகாரி ஒருவர், மதுரையில் மத்திய அரசு பணியில் உள்ளார். அவர் சில நாட்களுக்கு முன்பு துபாய், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றிருந்தார். பின்னர் அவர் கடந்த 29-ந்தேதி மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் கேரளாவுக்கு சென்று விட்டார்.

பின்னர் மதுரைக்கு வந்து பணியாற்றி கொண்டிருந்த அந்த அதிகாரிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக நேற்று மாலை 5 மணியளவில் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள ‘கொரோனா’ சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அரசு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி கூறும்போது, “கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வந்த அதிகாரிக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பின்னர் தான் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா-இல்லையா? என்பதை உறுதியாக கூறமுடியும். தற்போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். கொரோனா பாதிப்பு இல்லை என அறிக்கை வந்தால் அவரை உடனடியாக சாதாரண வார்டுக்கு அனுப்பிவிடுவோம். அதுவரை அவர் கொரோனா வார்டில் சிகிச்சையில் இருப்பார். பெரும்பாலும் கொரோனா பாதிப்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை” என்று கூறினார்.

Next Story