குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 March 2020 11:00 PM GMT (Updated: 9 March 2020 7:38 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் சந்தைப்பேட்டை கடைத் தெருவில் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார். செல்வராசு எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இடும்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு திருமருகல் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வழங்கப்பட்ட கட்சி வளர்ச்சி நிதி ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்று கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அடிக்கல் நாட்டு விழா

பல்வேறு கட்சிகள் இணைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகிறது. போராட்டம் தான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. பா.ஜனதா அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்து நாட்டை மத ரீதியாக துண்டாட நினைக்கிறது.கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல தமிழக சட்டசபையிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

நாகை அருகே ஒரத்தூரில் நடந்த மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினரையும்,நாடாளுமன்ற உறுப்பினரையும் பேச அனுமதிக்கவில்லை. மத்திய அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரியை தமிழ்நாட்டிற்கு வழங்கியது உள்ளது. ஆனால் அதில் ஒன்றில் கூட தமிழக மாணவர்கள் படிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் மஞ்சுளா, கட்சி நிர்வாகிகள் தமிழரசன், தங்கையன், சவுரிராஜன், ரமே‌‌ஷ், ராஜேந்திரன், சரோஜா, சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story