உடுமலையில் பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
உடுமலையில் பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை,
உடுமலை சங்கிலி வீதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கருப்பண்ணசாமி பூஜை, திருமூர்த்தி மலையில் இருந்து கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருதல்,புண்ணியார்ச்சனை, கொடியேற்றுதல்,காப்புகட்டுதல், முளைப்பாலிகையிடுதல்,கும்பம் எடுத்து வருதல்,பூவோடு எடுத்து வருதல், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவையொட்டி தினசரி ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம்,பக்தி பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி இறக்குதல்,கும்பம் விடுதல் நிகழ்ச்சிகளும்,நாளை(புதன் கிழமை)இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 9 மணிக்கு மகா அபிஷேகம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை நாடார் உறவின் முறையார் சங்கம், உடுமலை நாடார் மகளிர் அணி, இளைஞர் அணி ஆகியவற்றின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story