பிளஸ்-2 கணிதத்தேர்வு கடினமாக இருந்தது - மாணவ மாணவிகள் கருத்து


பிளஸ்-2 கணிதத்தேர்வு கடினமாக இருந்தது - மாணவ மாணவிகள் கருத்து
x
தினத்தந்தி 10 March 2020 3:00 AM IST (Updated: 10 March 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 கணிதத்தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருப்பூர், 

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கணித பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. கணித தேர்வை பள்ளி மாணவ-மாணவிகள் 10,354 பேர், தனித்தேர்வர்கள் 54 பேர் என்று மொத்தம் 10,408 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் பள்ளி மாணவ-மாணவிகள் 8,770 பேர், தனித்தேர்வர்கள் 36 பேர் என்று மொத்தம் 8,806 பேர் எழுதினார்கள். பள்ளி மாணவ-மாணவிகள் 1,584 பேர், தனித்தேர்வர்கள் 18 பேர் என்று மொத்தம் 1,602 பேர் எழுத வில்லை.

அதே போல் வணிகவியல் தேர்வை பள்ளி மாணவ-மாணவிகள் 14,097 பேர், தனித்தேர்வர்கள் 144 பேர் என்று மொத்தம் 14,241 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் 13,287 பேர், தனித்தேர்வர்கள் 121 பேர் என்று மொத்தம் 13,408 பேர் எழுதினார்கள். பள்ளி மாணவர்கள் 810 பேர், தனித்தேர்வர்கள் 23 பேர் என்று மொத்தம் 833 பேர் தேர்வு எழுத வரவில்லை.

விலங்கியல் தேர்வை பள்ளி மாணவர்கள் 321 பேர், தனித்தேர்வர்கள் 2 பேர் என்று மொத்தம் 323 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் பள்ளி மாணவர்கள் 280 பேர், தனித்தேர்வர் 1 என்று மொத்தம் 281 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். பள்ளி மாணவர்கள் 41 பேர், தனித்தேர்வர் 1 என்று மொத்தம் 42 பேர் தேர்வை எழுதவில்லை.

நுண்ணுயிரியல் பாடத்துக்கான தேர்வை எழுத 45 மாணவ-மாணவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஒருவர் தேர்வு எழுத வரவில்லை. 44 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள்.

சத்துணவியல் பாடத்துக்கு மாணவிகள் 52 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 9 பேர் தேர்வு எழுத வரவில்லை. 43 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள்.

நெசவு மற்றும் ஆடை வடிவமைப்பு பாடத்துக்கான தேர்வை 95 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 6 பேர் தேர்வு எழுத வரவில்லை. 89 பேர் மட்டும் தேர்வை எழுதினார்கள். உணவு மேலாண்மை பாடத்துக்கான தேர்வை பள்ளி மாணவ- மாணவிகள் 47 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 4 பேர் தேர்வு எழுத வரவில்லை. 43 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள்.

விவசாய அறிவியல் பாடத்துக்கான தேர்வை பள்ளி மாணவர்கள் 64 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வை 6 பேர் எழுத வரவில்லை. 58 பேர் மட்டுமே எழுதினார்கள். செவிலியர் (பொது) பாடத்துக்கான தேர்வை பள்ளி மாணவிகள் 74 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 10 பேர் தேர்வு எழுத வரவில்லை. 64 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். தேர்வில் எந்த வித ஒழுங்கீனமான பிரச்சினைகளும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்ததாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் தெரிவித்தார்.

கணித தேர்வு கடினமாக இருந்ததாக அரசு மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

மோகனபிரியா(ராமகிருஷ்ணா வித்யாலயா): கணித தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் கடினமாக இருந்தது. பாடப்புத்தகத்தின் பின் பகுதியில் கொடுக்கப்பட்டிருந்த வினாக்களில் 50 சதவீதம் கேட்கப்பட்டிருந்தது. மீதம் 50 சதவீத வினாக்கள் பாடபுத்தகத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது.

பிரியதர்ஷினி (ராமகிருஷ்ணா வித்யாலயா): கணித தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் மாற்றி, மாற்றி கேட்கப்பட்டிருந்ததால் குழப்பமாக இருந்தது. இதனால் விடை தெரிந்தும் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

அகபு (கே.எஸ்.சி. பள்ளி): விலங்கியல் பாடபுத்தகத்தின் பின் பகுதியில் கொடுக்கப்பட்டிருந்த வினாக்களில் இருந்து அதிக அளவில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. அதே சமயம் 1 மற்றும் 2 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கடினமாக இருந்தது.

காவியா:(அரசு மேல்நிலைப்பள்ளி கணக்கம்பாளையம்): வணிகவியல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் கடினமாகவே இருந்தது. அனைத்து வினாக்களும் பாடத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. நான் முக்கியமான வினாக்களை தேர்வு செய்து படித்திருந்தேன். அந்த வினாக்கள் தேர்வில் கேட்கப்படவில்லை. இவ்வாறு மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

Next Story