சேலத்தில் பெண் உள்பட 3 பேர் படுகொலை: வடமாநில வாலிபர்கள் 3 பேர் சிக்கினர் கற்பழிக்க முயற்சியா?-பரபரப்பு தகவல்கள்


சேலத்தில் பெண் உள்பட 3 பேர் படுகொலை: வடமாநில வாலிபர்கள் 3 பேர் சிக்கினர் கற்பழிக்க முயற்சியா?-பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 10 March 2020 5:30 AM IST (Updated: 10 March 2020 2:16 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பெண் உள்பட 3 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 3 பேர் போலீசில் சிக்கினர். கொலையுண்ட பெண்ணை மர்ம நபர்கள் கற்பழிக்க முயன்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் ஆகா‌‌ஷ் (வயது 27). இவரது மனைவி வந்தனா (25). இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. ஆகா‌ஷின் உறவினரான சிறுவன் சன்னி (16). இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே பெருமாம்பட்டி கிலான் வட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். அதே பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான வெள்ளிப்பட்டறையில் ஆகாஷ், வந்தனா, சன்னி ஆகியோர் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆகா‌‌ஷ், வந்தனா, சன்னி ஆகியோர் வீட்டில் இருந்தனர். பின்னர் நள்ளிரவில் குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தது. இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர், ஆகா‌‌ஷ் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டிற்குள் வந்தனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும், வந்தனாவின் கணவர் ஆகா‌‌ஷ் எங்கே? என்று தேடிபார்த்தபோது, வீட்டின் பின்புற பகுதியில் அவரும், உறவினர் சன்னி ஆகிய 2 பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதன்படி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு பதிவாகியிருந்த தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பகுதியில் தங்கியிருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் மாயமானது தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனிடையே, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்த்தபோது, கொலையாளிகள் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனால் ஆகா‌ஷின் வீட்டின் அருகே தங்கியிருந்த வடமாநில வாலிபர்கள் வினோத், தினே‌‌ஷ், விஜி, சுராஜ் ஆகிய 4 பேரும் மதுபோதையில் இந்த கொடூர கொலைகளை அரங்கேற்றிவிட்டு தப்பிஓடியிருக்கலாம் என்று போலீசார் உறுதி செய்தனர்.

கற்பழிக்க முயற்சி

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் இரும்பாலை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 3 பேரை கொலை செய்த கும்பல் ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் தங்கியிருந்து வேலை செய்ததாகவும், பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் அவர்கள் சேலத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆகா‌‌ஷ் தம்பதிக்கும், அவர்களுக்கும் இடையே பணம் வாங்கல், கொடுக்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் கொலை செய்யப்பட்ட வந்தனாவின் கழுத்து பகுதியில் நகக்கீறல்கள் இருந்ததோடு, அவரது சுடிதாரும் கிழிந்த நிலையில் இருந்தது. இதனால் அவரை 4 பேரும் சேர்ந்து கற்பழிக்க முயற்சி செய்திருக்கலாம் என்றும், அதனை தடுக்க வந்த அவரது கணவர் ஆகா‌‌ஷ், உறவினர் சன்னி ஆகியோரை கழுத்து அறுத்து அந்த கும்பல் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் கற்பழிக்கப்பட்டாரா? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

3 பேர் பிடிபட்டனர்

இது ஒருபுறம் இருக்க, சேலம் ஜங்‌‌ஷன் ரெயில் நிலையம், பஸ் நிலையம் வழியாக கொலையாளிகள் வட மாநிலங்களுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது உத்தரவுப்படி துணை கமி‌‌ஷனர் தங்கதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜங்‌‌ஷன் ரெயில் நிலையம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் விடிய, விடிய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதேசமயம், சந்தேகம்படும்படி அங்கு சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதேசமயம், கொலை யாளிகளின் செல்போன் சிக்னலை வைத்து அவர்கள் எங்கு உள்ளனர்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன்படி கொலையாளிகள் கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் பாலக்காட்டிற்கு இரவோடு இரவாக விரைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்த வினோத், தினே‌‌ஷ், விஜய் ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் சேலத்திற்கு அழைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய அவர்களது கூட்டாளி சுராஜை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலத்தில் பெண் உள்பட 3 பேரை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவது அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story