தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு போலீசார் விசாரணை


தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 March 2020 11:00 PM GMT (Updated: 9 March 2020 8:52 PM GMT)

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற 5 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அரூர் தாலுகா எல்லப்புடையாம்பட்டியை சேர்ந்த கோபால், அவருடைய மனைவி சுகுணா, மகன் திருப்பதி, உறவினர் மாதவி என தெரியவந்தது. கோபாலுக்கும், அவருடைய சகோதரர்களுக்கும் சொந்தமான பொது கிணற்றில் சகோதரர் ஒருவர் தண்ணீர் எடுக்க அனுமதிக்காமல் தடுப்பதாகவும், அதனால் விவசாயம் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காததால் பாதிக்கப்பட்டு தீக்குளிக்க முயன்றதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

ஜீவனாம்சம்

இதேபோல் தர்மபுரி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் தீக்குளிக்க முயன்ற மற்றொரு பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜலட்சுமி (39) என தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு இவருடைய கணவர் விவாகரத்து செய்து விட்டதாகவும், இதுவரை ஜீவனாம்சம் கிடைக்காததால் வாழ்க்கை நடத்த சிரமப்பட்டு தீக்குளிக்க முயன்றதாகவும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5 பேர் தீக்குளிக்க முயன்ற பரபரப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story