மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 9 March 2020 11:30 PM GMT (Updated: 9 March 2020 8:55 PM GMT)

கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் மாநிலங்களவை அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

கிருஷ்ணகிரி,

அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு முடிவுபடி வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, கொள்கை பரப்பு செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இதில் ஒன்றிய மீனவர் அணி செயலாளர் கன்னியப்பன், மாவட்ட பிரதிநிதி மாதன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஒன்றியக்குழு உறுப்பினர் மாதேஷ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் ரமேஷ், கட்சி பிரமுகர்கள் தாபா வெங்கட்ராமன், கிருஷ்ணன், கவுன்சிலர் மகேந்திரன், சங்கீதா சரவணன், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணம்

கிருஷ்ணகிரி நகர அ.தி.மு.க. சார்பில் ரவுண்டானா அருகில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிக்கு நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் வெங்கடாசலம், தொகுதி செயலாளர் காத்தவராயன், முன்னாள் கவுன்சிலர்கள் புகழேந்தி, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ததற்காக கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வாசுதேவன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட பால்வளத்தலைவர் குப்புசாமி, ஒன்றியக்குழு தலைவர் ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பி.டி.சுந்தரேசன், கழகப் பிரமுகர் கே.பி.எம். சதீஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதாகேசவன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் ஆறுமுகம், நகர வங்கி தலைவர் திருநாவுக்கரசு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ராயக்கோட்டை-ஓசூர்

கெலமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க சார்பாக ராயக்கோட்டையில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களாக அறிவித்ததற்காக தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முருகன், கொப்பகரை ஊராட்சி மன்றத் தலைவர் அர்ஜூனன், முன்னாள் ஒன்றிய செயலாளர் தூர்ருவாசன், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.என்.கே.நாகராஜ், கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மகளிர் அணி கங்கம்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஓசூரில் நகர அ.தி.மு.க. சார்பில் ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலை முன்பு கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு, ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். கட்சி பிரமுகர் ஜி.ராமச்சந்திரப்பா முன்னிலை வகித்தார். இதில், நகர பொருளாளர் கே.என்.குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, வி.முரளி, தவமணி மற்றும் கட்சி பிரமுகர்கள் லஜபதி, அஜீத், சுப்பிரமணி, பவானிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story