கடையநல்லூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை


கடையநல்லூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 March 2020 11:30 PM GMT (Updated: 9 March 2020 9:36 PM GMT)

கடையநல்லூர் அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகளை, வனத் துறையினர் விரட்டியடித்தனர்.

அச்சன்புதூர்,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா மேல சொக்கம்பட்டி அருகே உள்ளது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம். இங்குள்ள கன்னியம்மன் கோவில் அருகே திரிகூடபுரத்தை சேர்ந்த ராமையா, சாமிதுரை, பீர் முகமது, அக்பர் ஆகியோர் பல ஏக்கர் நிலத்தில் தென்னை, வாழை, கரும்பு, பலா, எலுமிச்சை ஆகியவற்றை பயிர் செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக குட்டிகளுடன் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தினமும் இப்பகுதிக்கு வந்து தென்னை, வாழை, எலுமிச்சை மரங்களை பிடுங்கி எறிந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இதுவரை இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தென்னைகளை பிடுங்கி குருத்தோலைகளை மட்டும் தின்று நாசம் செய்துள்ளது. இதுகுறித்து வனத்துறையிடம் புகார் செய்யப்பட்டது.

பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு

அதன்பேரில் வனத்துறை யானைகளை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள பாலாத்தி மலை பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை ரேஞ்சர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். மேலும், அவற்றின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இதுகுறித்து ரேஞ்சர் செந்தில்குமார் கூறியதாவது:-

மேக்கரையில் இருந்து சொக்கம்பட்டி வரை சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலைப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் சுற்றி திரிகின்றன. சொக்கம்பட்டி பீட்டில் இருந்து விரட்டப்படும் இந்த யானைகள் மேக்கரை பீட் சென்று வடகரை பகுதி விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கின்றன. அங்கே இருந்து விரட்டும் போது மீண்டும் சொக்கம்பட்டி பீட்டுக்கு வந்துவிடுகிறது. இரவு பகலாக யானைகளை வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் விரட்டி வருகின்றனர். இருப்பினும் விவசாயிகள் முழுமையான முறையில் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். விவசாயிகள் மாலை 5 மணிக்கு காட்டில் இருந்து வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். மீண்டும் மறுநாள் காலை 7 மணிக்குதான் தோட்டங்களுக்கு சென்று பார்க்கிறார்கள்.

இணைந்து செயல்பட வேண்டும்

ஆளில்லாத நேரத்தில் யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்கிறது. எனவே, விவசாயிகள் அங்கேயே தங்கி யானைகள் வருவதை தடுக்கும் விதத்தில் தீ மூட்டி வைக்க வேண்டும். மேலும் யானைகள் வருவதை கண்காணித்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது உடனடியாக அதிகாரிகள் விரைந்து வந்து காட்டுக்குள் சென்று வெடிவைத்து யானைகளை விரட்டி விடலாம். எனவே, விவசாயிகள் வனத்துறையுடன் இணைந்து செயல்பட்டால்தான் யானைகளை காட்டுக்குள் விரட்ட முடியும். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வனத்துறை ஊழியர்கள் சொக்கம்பட்டி பீட் பகுதிக்கு சென்று அங்கே நின்ற யானை கூட்டத்தை பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story