நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் திடீர் தர்ணா போராட்டம் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
நெல்லை,
தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் ஒருவர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாலியல் தொல்லை
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். நுழைவு வாசலில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தன்னிடம் 4 பேர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் அளிக்க வேண்டும் என்று கூறினார். போலீசார், கலெக்டர் தற்போது தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறார் என்றனர். அப்போது அந்த பெண் திடீரென்று கலெக்டர் அலுவலக கட்டிடத்துக்குள் புகுந்தார்.
திடீர் தர்ணா போராட்டம்
பின்னர் அவரை போலீசார் பிடித்து கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுக்கச் செய்தனர். ஆனால் மனு கொடுத்ததற்கு அத்தாட்சியாக ரசீது தரவேண்டும் என்று அடம்பிடித்தார். ஒருவழியாக அதையும் ஏற்பாடு செய்து வெளியே அழைத்து வந்த போது, ரசீதில் எத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடவில்லை, சீல் வைக்க வில்லை என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
மனு கொடுத்து விட்டதால், திருக்குறுங்குடி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்துவார்கள் என்று போலீசார் சமாதானப்படுத்தி வளாகத்தை விட்டு வெளியே அனுப்ப முயற்சி செய்தனர். அப்போது தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்த போலீசாரை தன்னுடன் வந்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அழைத்தார். பின்னர் அவரை போலீசார் நீண்ட நேரமாக சமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த கலெக்டர் ஷில்பா தனது உதவியாளரை நேரில் அனுப்பி சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story