எம்.ஆர். பாளையம் காப்பகத்தில் நெல்லையில் இருந்து காயங்களுடன் வந்த யானைக்கு சிகிச்சை


எம்.ஆர். பாளையம் காப்பகத்தில் நெல்லையில் இருந்து காயங்களுடன் வந்த யானைக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 10 March 2020 11:30 PM GMT (Updated: 10 March 2020 5:08 PM GMT)

நெல்லையில் இருந்து காயங்களுடன் வந்த யானைக்கு எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமயபுரம்,

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சந்தியா, ஜெயந்தி, இந்து ஆகிய மூன்று யானைகள் கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த யானைகளை பராமரித்து வந்த பாகன் இறந்துவிட்டார். இதனால் யானைகளை பராமரிக்க உரிய பாகன்கள் இல்லாததால் யானைகள் நலிவடைந்தன. இதன் காரணமாக யானைகளுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த 3 யானைகளும் தனியார் தொண்டு நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த 3 யானைகளையும் யானைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் காப்பகத்திற்கு அந்த யானைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு அந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மதுரையில் இருந்து மலாச்சி என்ற யானையும் அங்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அந்த காப்பகத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இயற்கை சூழ்நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் இங்கு யானைகள் குளிப்பதற்காக ‘ஷவர்‘, நடைபயிற்சி செய்வதற்காக பாதைகள் மற்றும் ஒவ்வொரு யானைக்கும் தனித்தனியாக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் யானைகளுக்கு தீவனங்கள் சேகரித்து வைக்க தனி கொட்டகைகள், சமைப்பதற்கு என தனி கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த யானைகளை பராமரிக்க முதுமலை வனப்பகுதியில் இருந்து 8 பாகன்கள் வரவழைக்கப்பட்டு, அவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனவிலங்கு மருத்துவர்களும் யானைகளை கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

சிகிச்சை

இந்நிலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஒருவர் வளர்த்து வந்த ஜமீலா (வயது 60) என்ற யானை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததால், அதன் 2 கால்களின் பின்புறமும் காயங்கள் ஏற்பட்டது. சுமார் இருபது ஆண்டுகளாக யானைக்கு காயங்கள் ஆறவில்லை. இதனால் யானை மிகுந்த அவதிக்கு உள்ளானது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஜமீலா யானை அங்கிருந்து லாரி மூலம் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அந்த யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு யானையை ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருவதற்கு தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட வன அலுவலர் சுஜாதா தெரிவித்தார். மேலும் கோடை காலங்களில் வறட்சி ஏற்படும்போது தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக 5 ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் யானைகள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானைகளுக்கு பசுந்தீவனங்கள், கரும்பு, காய்கறிகள், அரிசி வகை உணவுகள் என 3 நேரத்திற்கும் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசு அனுமதி கிடைத்தவுடன் வண்டலூர் பூங்கா போல இங்கும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் இங்கு வந்து பார்வையிடலாம். அரசு அதற்கு அனுமதி வழங்க வேண்டும், என்றும் அவர் கூறினார்.

Next Story