மாற்றுத்திறனாளி ஆசிரியையை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் கைது


மாற்றுத்திறனாளி ஆசிரியையை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 March 2020 5:30 AM IST (Updated: 10 March 2020 10:41 PM IST)
t-max-icont-min-icon

தரகம்பட்டி அருகே மாற்றுத்திறனாளி ஆசிரியையை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி களுத்தரிக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மகள் பானுமதி (வயது 30). மாற்றுத்திறனாளியான இவர் நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் குழந்தைகள் காப்பகத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் பணியாற்றிய மயிலாடுதுறை குழந்தைகள் காப்பகத்துக்கு புதுக்கோட்டை மாவட்டம் பிச்சநத்தம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (30) என்பவர் அன்னதானம் வழங்க அடிக்கடி வருவார். அப்போது, எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தோம். அப்போது, என்னிடம் ரூ.75 ஆயிரம் வாங்கினார். இந்தநிலையில் கண்ணன் திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டதை அடுத்து எனது பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு கொடுத்தனர்.

கைது

இதற்கிடையே கடந்த 2-ந் தேதி கண்ணன் எனக்கு திருமணம் வேண்டாம் என்று எனது பெற்றோரிடம் கூறினார். எனவே திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். அதன்பேரில் பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னம் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வந்தார். இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்த கண்ணனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கண்ணனை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story