சிங்கப்பூரில் நடந்த விபத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் பலி


சிங்கப்பூரில் நடந்த விபத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 11 March 2020 5:00 AM IST (Updated: 10 March 2020 11:13 PM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரில் நடந்த விபத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் பலியானார். அவரது உடல் இன்று (புதன்கிழமை) சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மணிமேகலை. இவர்களது மகன் ராஜகுரு(வயது 30). மெக்கானிக் என்ஜினீயர். இவருக்கு விஜயா(26) என்ற மனைவியும், கிஷோர்(3) என்ற மகனும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ராஜகுரு நேற்று முன்தினம் மதியம் பணி முடிந்து தான் தங்கியிருந்த அறைக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ஒரு திருப்பத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அவரது உடல் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

விமானம் மூலம்...

பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைப்பதில் டாக்டர்கள் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. ராஜகுருவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வைத்துள்ளனர். இந்திய தூதரகம் மூலம் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரியலூர் கலெக்டர் ரத்னா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் அவரது உடல் இன்று (புதன்கிழமை) விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட உள்ளது. 

Next Story