கும்பகோணம் அருகே கோவிலில் கொள்ளை போன சாமி சிலைகள் மீட்பு ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் கைது


கும்பகோணம் அருகே கோவிலில் கொள்ளை போன சாமி சிலைகள் மீட்பு ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 March 2020 5:45 AM IST (Updated: 10 March 2020 11:24 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே கோவிலில் கொள்ளை போன 3 சாமி சிலைகள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில் பிரசித்தி பெற்ற சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த மாதம் 10-ந் தேதி இரவு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கோவிலுக்குள் இருந்த 3 பித்தளை சாமி சிலைகள் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பூஜை பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தனிப்படையினர் தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் தனிப்படை போலீசார் கடந்த 7-ந் தேதி கும்பகோணம் கணபதி நகரை சேர்ந்த ராமலிங்கம்(வயது 46) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ராமலிங்கம் தனது நண்பரான தஞ்சாவூர் பொட்டுவாச்சாவடி பகுதியை சேர்ந்த மெல்வின் சகாயராஜ்(40) என்பவருடன் இணைந்து கோவிலில் சிலைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது.மேலும் ராமலிங்கத்தின் செல்போனை ஆய்வு செய்தபோது அவரது மனைவி ராசாத்தி(35), மகன் கமல்ராஜ்(20) ஆகியோருக்கும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மெல்வின் சகாயராஜ், ராசாத்தி, கமல்ராஜ் ஆகியோரை தேடி வந்தனர்.

பறிமுதல்

இந்த நிலையில் கும்பகோணம் காமராஜர் நகர் பகுதியில் மெல்வின் சகாயராஜ், ராசாத்தி, கமல்ராஜ் ஆகிய 3 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் நேற்று அதிகாலை கும்பகோணம் காமராஜர் நகர் பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளை போன 3 சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட ராமலிங்கம் உள்பட 4 பேரையும் போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகள் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story