தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு


தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 March 2020 11:00 PM GMT (Updated: 10 March 2020 8:56 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் காப்புக்காட்டில் ஏராளமான காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், ராகி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று நொகனூர் காப்புக்காட்டில் இருந்து ஒரு யானை வனப்பகுதியை ஒட்டியுள்ள கெண்டிகானப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்தது. அந்த யானை தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் நீண்ட நேரம் சுற்றித் திரிந்தது. இதைப் பார்த்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

விரட்டியடிப்பு

மேலும் யானை பொதுமக்களை துரத்தியது. இதனால் பயந்து போன பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் காட்டு யானையை பட்டாசுகள் வெடித்தும், தாரை, தப்பட்டைகள் அடித்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆக்ரோ‌‌ஷமடைந்த யானை வனத்துறையினரையும் துரத்தியது.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். மேலும், அது மீண்டும் ஊருக்குள் வருவதை தடுக்க தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காட்டு யானை ஊருக்குள் புகுந்து பொதுமக்களை துரத்திய சம்பவம் தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story