ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த வழக்கில் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஆவடி அருகே உள்ள கோவில்பதாகையைச் சேர்ந்தவர் வீரராகவன்(வயது 66). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். வீரராகவனிடம் ஆவடி அடுத்த மோரை அண்ணா நகர், திருமலை நகரை சேர்ந்த பத்து என்கின்ற பத்மநாபன்(50) உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பு ரவி என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தவர்.
இந்த நிலையில் பத்மநாபன் தனக்கு ஆட்டோ வாங்கவும், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவும் பணம் தேவைப்படுகிறது.
எனவே பணம் தருமாறு அடிக்கடி வீரராகவனை மிரட்டி வந்தார். அதற்கு வீரராகவன் பணத்தை இப்போது தர முடியாது, சிறிது காலம் கழித்து தருவதாக கூறியுள்ளார்.
17 இடங்களில் வெட்டு
இந்த நிலையில் கடந்த 16.11.2016 அன்று பத்மநாபன் தான் பணம் கேட்டும், வீரராகவன் கொடுக்காத ஆத்திரத்தில் இருந்தார். ஆவடி டேங்க் பேக்டரி அருகே தைலந்தோப்பு பகுதியில் நடை பயிற்சிக்கு சென்ற வீரராகவனை மோட்டார் சைக்கிளில் சென்று வழிமறித்து நிறுத்தி உள்ளார்.
அப்போது அவரை தகாத வார்த்தையால் பேசி, தான் வைத்திருந்த கத்தியால் விஜயராகவனின் தலை, கழுத்து மார்பு என 17 இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வீரராகவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்து என்கிற பத்மநாபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வி.ஆர்.ராம்குமார் வாதாடினார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெ.செல்வநாதன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து பத்மநாபனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் பத்மநாபனை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story