நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 March 2020 5:00 AM IST (Updated: 11 March 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற தொழிற்சங்கங்களோடு பேச வேண்டும், குறைந்தபட்சம் 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வேலைப்பளு திணிப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அனைத்து மண்டல தலைமையகங்களில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

இதேபோல் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இரவிலும்...

போராட்டத்துக்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. செயல் தலைவர் லட்சுமணன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் ஞானதாஸ், பேரவை துணை செயலாளர் இளங்கோ, சி.ஐ.டி.யு. தலைவர் சங்கரநாராயணன், பொதுச்செயலாளர் ஸ்டீபன் ஜெயக்குமார், எச்.எம்.எஸ். செயலாளர் லெட்சுமணன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் நீலகண்டன், எம்.எல்.எப். பொதுச்செயலாளர் சந்திரன், ஓய்வு பெற்றோர் நலச்சங்க செயலாளர் சுந்தர்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காலை முதல் மாலை வரை நடந்தது. இரவிலும் இந்த போராட்டம் தொடரும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story