திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா: திரளான பக்தர்கள் சாமிதரிசனம்


திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா: திரளான பக்தர்கள் சாமிதரிசனம்
x
தினத்தந்தி 11 March 2020 4:15 AM IST (Updated: 11 March 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

அனுப்பர்பாளையம், 

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாதசுவாமி கோவில் உள்ளது. மாசி திருவிழாவையொட்டி கோவில் தேரோட்டம் கடந்த 8 மற்றும் 9-ந்தேதி 2 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் திருமுருகநாதசுவாமி கோவில் அருகே உள்ள மகாமக விநாயகர் தெப்பக்குளத்தில் நேற்றுமாலை தெப்பத்திருவிழா நடைபெற்றது. சோமாஸ்கந்தர் அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு சப்பரத்தில் அழைத்து வரப்பட்டார்.

பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படை சூழ தெப்பத்தேரில் 11 முறை குளத்தை சுற்றி வலம் வந்தார். அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சோமஸ்கந்தரை வழிபட்டனர்.

தெப்பத்திருவிழாவுக்கு பின்னர் மகாமக விநாயகர் கோவில் முன்பு சோமஸ்கந்தருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து முக்கிய வீதிகள் வழியாக சோமாஸ்கந்தர் ஊர்வலமாக வந்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஓம் பசுமை அங்காடி, உமாசங்கர் சாந்தி அறக்கட்டளை மற்றும் திருமுருகநாதசுவாமி கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் பக்தர்களுக்கான வசதிகளை செய்து கொடுத்தனர். விழா நடைபெற்ற தெப்பக்குளத்தை சுற்றி விளக்குகள் ஏற்றப்பட்டும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் இருந்ததால் அந்த பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவையொட்டி திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story