திருச்சி-காரைக்கால் ரெயிலில் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை


திருச்சி-காரைக்கால் ரெயிலில் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 March 2020 12:00 AM GMT (Updated: 11 March 2020 5:44 PM GMT)

திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயிலில் சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை கடத்தி வந்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால்-திருச்சி இடையே பயணிகள் ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காரைக்காலில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரெயில் திருச்சி ஜங்‌‌ஷன் ரெயில் நிலையத்திற்கு இரவு வந்தது. பின்னர் அந்த ரெயில் யார்டிற்கு சென்றது. மீண்டும் திருச்சியில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு புறப்பட தயாராக நடைமேடைக்கு ரெயில் வந்தது. அப்போது ரோந்து பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை ஏட்டு ரகுராம் ரெயிலில் சோதனை மேற்கொண்டார்.

ரெயிலின் ஒரு பெட்டியில் கழிவறையில் 6 பைகள் மூடிய நிலையில் இருந்தன. அந்த பைகளை அவர் திறந்து பார்த்தபோது அவற்றில் ‘பாண்டி ஐஸ்’ என்ற பெயரில் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் அதனுள் தண்ணீர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை போல இருந்தது. அந்த பாக்கெட்டுகள் மீது சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக திருச்சி ஜங்‌‌ஷன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் வள்ளிநாயகம், முரளிதரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பைகளில் இருந்த பாக்கெட்டுகளில் ஒன்றை எடுத்து சோதனையிட்டனர். அதில் பாக்கெட்டில் சாராயம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

இதைத்தொடர்ந்து சாராய பாக்கெட்டுகள் இருந்த பைகள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பைகளில் இருந்த பாக்கெட்டுகளையும் எண்ணியபோது, 700-க்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘காரைக்காலில் இருந்து இந்த சாராய பாக்கெட்டுகளை ரெயிலில் மர்மநபர்கள் கடத்தி வந்திருக்கலாம். இதுபோன்ற சாராயம் காரைக்கால் பகுதியில் தான் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அங்கிருந்து மொத்தமாக வாங்கி வந்து திருச்சி பகுதியில் விற்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் தான் இதனை கடத்தி வந்திருக்க வேண்டும்.

திருச்சியில் நேற்று முன்தினம் இரவு ரெயில் வந்தபோது கலால் பிரிவினர் ரகசிய சோதனையில் ஈடுபட்டிருக்கலாம். இதனால் சாராய பாக்கெட்டுகளை கழிவறையில் வைத்துவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றிருக்க வாய்ப்பு உண்டு. மீண்டும் காலை ரெயில் புறப்படும்போது அதனை எடுத்து செல்ல நினைத்து விட்டுச்சென்றிருக்கலாம். இதனை கடத்தி வந்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.

ரூ.20 முதல் ரூ.50-க்கு விற்பனை

பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை திருச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட சாராய பாக்கெட்டுகள் தலா ரூ.20 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. திருச்சியில் ஏற்கனவே கஞ்சா புழக்கம் அதிகமாக இருந்து வருகிற நிலையில், சாராய பாக்கெட்டுகளும் மறைமுக விற்பனை நடந்து வருவதை இந்த சம்பவம் காட்டுகிறது.


Next Story