கேரளாவில் பறவை காய்ச்சல்: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு


கேரளாவில் பறவை காய்ச்சல்: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு
x
தினத்தந்தி 11 March 2020 11:30 PM GMT (Updated: 11 March 2020 7:49 PM GMT)

கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு ஏறத்தாழ 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தியால் கோழி மற்றும் முட்டை விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது. அதில் இருந்து பண்ணையாளர்கள் மீண்டு வரும் வேளையில் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய், வாத்து மற்றும் கோழிகளை தாக்கி இருப்பது பண்ணையாளர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

கேரளாவில் இருந்து இந்த நோய் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்பு துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அங்கிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

கிருமிநாசினி மருந்து

இது ஒருபுறம் இருக்க, அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் வரும்போதெல்லாம் தமிழக பண்ணையாளர்கள் தங்களது பண்ணைகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் நாமக்கல்லில் உள்ள அனைத்து பண்ணைகளிலும் கிருமிநாசினி கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரசாயன திரவம் கலந்த தண்ணீரில் கால்களை நனைத்த பிறகே பண்ணைக்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து கோழித்தீவனம் ஏற்றி வரும் வாகனங்களும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

இதற்கிடையே அனைத்து பண்ணைகளிலும் கோழிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story