சேலம் மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


சேலம் மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 March 2020 11:00 PM GMT (Updated: 11 March 2020 8:15 PM GMT)

சேலம் மாநகராட்சி சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம்,

சேலம் மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சேலம் சின்னதிருப்பதி ஜெய்ராம் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபன், கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாநகராட்சி ஆணையாளர் சதீ‌‌ஷ் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் நோய் தடுப்பது குறித்தும், அதனை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது:-

நோயின் அறிகுறிகள்

டெங்கு காய்ச்சல் வந்த சமயத்தில், சேலம் மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி அது கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல், தற்போது கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுப்பது நம் அனைவருடைய கடமையாகும். தீவிர காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு மற்றும் மூச்சு திணறல் போன்றவை கொரோனா வைரஸ் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆகும்.

நோயின் அறிகுறிகள் உள்ளவர்கள் பொது இடங்கள் மற்றும் விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இருமல் மற்றும் தும்மல் வரும்போது வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை மூலம் மூடி கொள்ள வேண்டும். தினமும் பலதடவை 6 நிலைகளில் கைகளை கழுவிட வேண்டும். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முறைகளை கடைபிடிப்பதோடு மட்டுமின்றி பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஆணையாளர் சதீ‌‌ஷ் பேசினார்.

துண்டு பிரசுரங்கள்

இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் அறிகுறிகள் மற்றும் நோய் பரவும் விதத்தினை கண்டறிந்து அவற்றிலிருந்து தற்காத்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆணையாளர் வெளியிட்டார். மேலும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் கைகள் கழுவும் முறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கங்களும் செய்து காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி ஆணையாளர் கவிதா, உதவி செயற்பொறியாளர் திலகா, உதவி பொறியாளர் நித்யா, தாய்-சேய் நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் சித்தேஸ்வரன், கந்தசாமி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story