பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் திறக்கக்கோரி காய்ந்த வாழை மரங்களுடன் விவசாயிகள் ஊர்வலம்


பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் திறக்கக்கோரி காய்ந்த வாழை மரங்களுடன் விவசாயிகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 11 March 2020 11:30 PM GMT (Updated: 11 March 2020 8:36 PM GMT)

தொட்டியம் பகுதி பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடத்தினர். இதனால் திருச்சி-நாமக்கல் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொட்டியம்,

வெற்றிலை, வாழை போன்ற ஆண்டு பயிர்களை காப்பாற்றும் வகையில் குடிநீருடன் சேர்த்து காவிரியாற்றில் தொடர்ந்து 4 மாதங்கள் சுமார் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் தொட்டியம்-லாலாப்பேட்டை இடையே கதவணை அமைக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பாசன வாய்க்கால்களில் தண்ணீ்ர் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொட்டியம் வட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஊர்வலம் மற்றும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்து வணிகர்கள் சங்கம், இளைஞர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. போராட்டம் மற்றும் ஊர்வலம் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் சுகுமார் தலைமையில் தொட்டியத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தொட்டியம் பண்ணைவீடு அருகில் இருந்து திருச்சி-சேலம் மெயின் ரோடு வழியாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஏராளமான விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர்.

காய்ந்த வாழை மரங்கள்

அப்போது, அவர்கள் தங்களது விவசாய நிலத்தில் தண்ணீர் இல்லாமல் காய்ந்த வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை கொடிகளை கையில் பிடித்தபடியே தாலுகா அலுவலகத்துக்கு சென்றனர். ஊர்வலம் முடிந்ததும், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் காந்திபித்தன், மகாதானபுரம் ராஜாராமன், அய்யாக்கண்ணு, தியாகராஜன், கிரு‌‌ஷ்ணமூர்த்தி, செல்வராஜ், கார்த்திக் ஆகியோர் பேசினர். பின்னர் தாசில்தார் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இந்த ஊர்வலம் மற்றும் போராட்டத்தில் தொட்டியம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் காரணமாக திருச்சி-சேலம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story