கூட்டுக்குடிநீர் திட்டம் ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு வரும் குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்


கூட்டுக்குடிநீர் திட்டம் ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு வரும் குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 11 March 2020 11:30 PM GMT (Updated: 11 March 2020 9:46 PM GMT)

அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் அதிகாரிகள் கூறினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வடிகால் வாரிய திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அப்போது, “அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் 109.79 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் தற்போது 96 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஏப்ரல் மாதம் (அடுத்த மாதம்) பயன்பாட்டுக்கு வரும். இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தோவாளை ஒன்றியத்தில் 4 பேரூராட்சிகள், 16 பஞ்சாயத்துகள் பயன் அடையும்.

இதே போல் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 5 பேரூராட்சிகளும், 10 பஞ்சாயத்துகளும், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் 4 பஞ்சாயத்துகளும் பயன்பெறும். அதாவது 2013-ம் ஆண்டு திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் பயன்பாட்டில் இருந்து வரும் அனைத்து குடிநீர் தொட்டிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இரணியல் கூட்டுக்குடிநீர் திட்டம் 174 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நவம்பர் மாதத்துக்குள் முடிவடையும்“ என்றனர்.

தடுப்பணை

இதைத் தொடர்ந்து உறுப்பினர் ராஜேஷ்பாபு பேசுகையில், “குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தண்ணீர் குறைவாக இருக்கும் காலத்தில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் வந்து விடுகிறது. இதனால் ஆற்றின் கரையில் உள்ள குடிநீர் திட்டங்கள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் பாதிக்கப்படுகின்றன“ என்றார்.

இதற்கு அதிகாரிகள் விளக்கமளிக்கையில், “பொதுப்பணித்துறை சார்பில் பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் தாமிரபரணி ஆற்றில் கடல்நீர் புகும் நிலை ஏற்படாது“ என்றனர்.

கொரோனா வைரஸ்

இதனையடுத்து துணை தலைவர் சிவகுமார் கூறுகையில், “உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன?“ என்றார்.

இதற்கு சுகாதாரத்துறை அதிகாரி சூரிய நாராயணன் விளக்கம் அளித்து பேசுகையில், “அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு பணிகள் சுகாதார துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக களியக்காவிளை, சூழால் ஆகிய சோதனை சாவடிகளில் மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தினமும் 15 முறையாவது கை கழுவ வேண்டும் என்று மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். அதோடு மாணவ-மாணவிகளுக்கு சோப்பு வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்ட 8 பேரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டு ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு வார்டு ஏற்படுத்தப்பட உள்ளது. தக்கலை அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது“ என்றார்.

உறுப்பினர்கள்

கூட்டத்தில் உறுப்பினர்கள் அம்பிளி, செலின்மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல், ஜாண்சிலின் விஜிலா, பேராசிரியர் நீலபெருமாள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Next Story