ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக சினிமா நடிகர் உள்பட 2 பேர் மீது புகார்


ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக சினிமா நடிகர் உள்பட 2 பேர் மீது புகார்
x
தினத்தந்தி 11 March 2020 10:30 PM GMT (Updated: 11 March 2020 10:28 PM GMT)

சினிமா கூப்பனை கொடுத்து ரூ.6 லட்சம் மோசடி செய்த சினிமா நடிகர் உள்பட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், எலெக்ட்ரீசியன் மனு கொடுத்தார்.

திருப்பூர், 

திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் நேற்று திருப்பூர் கொங்கு மெயின் ரோடு குறிஞ்சிநகரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நான் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறேன். திருப்பூர் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த ஜெகஜீவன்ராம் என்பவர் எனக்கு பழக்கமானார். பிரபல நடிகர் ஆர்.கே. என்ற ராதாகிருஷ்ணன் “வைகை எக்ஸ்பிரஸ்” என்ற தமிழ் படம் தயாரிப்பதாகவும், என்னை சென்னைக்கு அழைத்து சென்று அறிமுகம் செய்துவைப்பதாகவும் கூறினார். அப்போது ஆர்.கே. என்னிடம், வைகை எக்ஸ் பிரஸ் படத்துக்கான ஆயிரம் ரூபாய் கூப்பன் 600-ஐ ஜெகஜீவன்ராமிடம் கொடுத்து அனுப்புவதாகவும், படம் ரிலீஸ் ஆகும்போது அந்த கூப்பனை ரூ.1500-க்கு விற்பனை செய்யலாம் என்றும் கூறினார்.

இதன் பின்னர் அவினாசிக்கு வந்த ஜெகஜீவன்ராம் என்னை தொடர்பு கொண்டு ஆர்.கே. கொடுத்து அனுப்பிய கூப்பன் இருப்பதாகவும், அதை வாங்கிக்கொள்ளும்படியும் கூறினார். அதன்படி நான் அவினாசி சென்று ஜெகஜீவன்ராமிடம், ரூ.6 லட்சம் கொடுத்து கூப்பன்களை வாங்கினேன். இதன் பின்னர் இந்த படம் திருப்பூரில் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. ஆனால் அந்த படத்தின் டிக்கெட் விலை ரூ.50-க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதனால் அந்த கூப்பன்களை விற்பனை செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தேன்.

எனவே என்னிடம் சினிமா கூப்பன்களை கொடுத்து ரூ.6 லட்சம் மோசடி செய்த நடிகர் ஆர்.கே. என்ற ராதாகிருஷ்ணன் மற்றும் ஜெகஜீவன்ராம் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story