அரசுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு: புதுச்சேரியை, தமிழகத்துடன் இணைக்க திட்டம்? அமைச்சர் கந்தசாமி பரபரப்பு பேச்சு


அரசுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு: புதுச்சேரியை, தமிழகத்துடன் இணைக்க திட்டம்? அமைச்சர் கந்தசாமி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 12 March 2020 5:13 AM IST (Updated: 12 March 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் நிலைப்பாட்டை பார்க்கும்போது எதிர்காலத்தில் புதுச்சேரியை, தமிழகத்துடன் இணைத்து விடுவார்களோ? என அமைச்சர் கந்தசாமி அச்சம் தெரிவித்தார்.

பாகூர்,

புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும், பல்வேறு போராட்டத்திற்கு பிறகுதான் கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று தற்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மத்திய அரசு புதுச்சேரியை மோசமான நிலைக்கு கொண்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு செலவிட நிதி இருந்தும், அதிகாரம் இல்லை.

இதனால், மாநிலம் திண்டாடி வருகிறது. புதுச்சேரிக்கு மட்டும் 2 சுதந்திர தினம். கீழூர் வாக்கெடுப்பின் மூலம் புதுச்சேரி, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது தான் இந்த வரலாறு. இது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழகத்துடன் இணைப்பு?

நீதிமன்ற தீர்ப்பு, மத்திய அரசின் நிலைப்பாட்டினை பார்க்கும்போது, எதிர்காலத்தில் புதுச்சேரியை, தமிழகத்துடன் இணைத்து விடுவார்களோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை ஏற்பட்டால் மக்களுடன் சேர்ந்து கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவேன். டெல்லி மாநிலத்திற்கு கொடுக்கப்பட்ட அதிகாரம், புதுச்சேரிக்கும் வழங்கப்பட வேண்டும். அதற்காக நீதிமன்ற தீர்ப்பை நான் விமர்சனம் செய்யவில்லை.

அனைத்து கட்சி மற்றும் அரசும் சேர்ந்து முடிவு எடுத்து புதுச்சேரிக்கு உள்ளாட்சி தேர்தல் ஆணையரை நியமித்தது. ஆனால், இது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லாத போது, புதுச்சேரிக்கு அரசு தேவையா? மாநிலத்தில் 13 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். இங்கு, 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், தமிழகத்தில் 7 கோடி மக்கள் தொகைக்கு குறைந்த அளவில் தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனர்.

வேலைவாய்ப்புகளுக்கு தடை

புதுச்சேரியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்குமே, அதிக நிதி செலவிட வேண்டி உள்ளது. இதனை எல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஏழைகளுக்கு சலுகை, இலவசங்கள், வேலைவாய்ப்புளுக்கு தடை விதித்து வருகிறது.

பிரதமர் மோடி, கவர்னர் மூலமாக புதுச்சேரி மாநிலத்தின் மீது அடக்கு முறையை கையாண்டு வருகிறார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) நடந்த மகளிர் தின விழாவில், பெண்கள் தங்களின் பிரச்சினைகளை தெரிவித்தனர். ஆனால், கவர்னர் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தேர்தலை பற்றி பேசுகிறார். இது பெண்கள் மத்தியில், அவர் மீதான அதிருப்தியை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த மாதிரியான ஒரு கவர்னர் புதுச்சேரிக்கு தேவை தானா? என மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story