கடலூரில், போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மண்டல தலைமை அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடிய, விடிய நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும். தொழிலாளர்களின் பணத்தில் நிர்வாகம் நடத்த கூடாது. ஆயிரம் நாட்களுக்கு மேல் பணி செய்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மண்டல தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி நேற்று முன்தினம் கடலூர் மண்டல தலைமை அலுவலகத்தில் அமர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய, விடிய இந்த போராட்டம் நீடித்தது. இருப்பினும் பஸ் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை.
நேற்று 2-வது நாளாகவும் போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும், போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதற்கு தொ.மு.ச. கடலூர் மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கி னார். சி.ஐ.டி.யு. சம்மேளன துணை தலைவர் பாஸ்கரன், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க மாநில செயலாளர் மணிமாறன், தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் கருணாநிதி, ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொ.மு.ச. துணை பொதுச்செயலாளர் ஜெயராவ், சி.ஐ.டி.யு. மண்டல தலைவர் ஜான்விக்டர், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க துணை தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இது பற்றி சி.ஐ.டி.யு. பாஸ்கரன் கூறுகையில், எங்களின் கோரிக்கைகளை தமிழக அரசும், போக்குவரத்து கழக நிர்வாகமும் நிறைவேற்றும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்றார். போராட்டத்தையொட்டி கடலூர் அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story