கடலூர் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் டெல்டா பிரிவு போலீசார் அரசன்குடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்ததில், வெடி மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் சிதம்பரம் அருகே உள்ள புதுபூலாமேட்டை சேர்ந்த சரவணன் மகன் அய்யர் என்கிற ராஜசேகர் (வயது 34), இவரது மனைவி நந்தினி, மகள் சுகாசினி என்பதும், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக வெடிமருந்துகளை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
மேலும் ராஜசேகர் மீது தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 கொலை வழக்கும், சேலம் மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கும், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு மற்றும் வேப்பூர், சேலம், ஏத்தாப்பூர், தஞ்சாவூர் தெற்கு வாசல் போன்ற போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழிப்பறி, ஆள் கடத்தல் வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, ராஜசேகர், நந்தினி ஆகியோரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதேபோல் நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பாதி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தம்பி கண்ணன், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுமன்ராஜ்(20), கவியரசன், சுந்தர்ராஜன், கார்த்திக்ராஜா என்கிற கார்த்திக், சுகன்ராஜா, தனசேகர் மகன் ஜெயச்சந்திரன்(20) ஆகியோர் வேல்முருகனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சுமன்ராஜ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் மேலகுண்டலபாடி கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வல்லம்படுகை புதுத்தெருவை சேர்ந்த மாசிலாமணி மகன் வினோத்(28) என்பவர் மண் பானைகளில் சாராயம் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான வினோத் மீது 4 சாராய வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கொலை வழக்குகளில் தொடர்புடைய அய்யர் என்கிற ராஜசேகர், ஜெயச்சந்திரன் மற்றும் சாராய வியாபாரி வினோத் ஆகியோரின் தொடர் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜசேகர், ஜெயச்சந்திரன், வினோத் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் அவர் களிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story