நோயாளிக்கு ஆக்சிஜன் செலுத்தும் முன்பு முறையாக பரிசோதிக்கப்படுகிறதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதிலாக நைட்ரஜன் ஆக்சைடு வாயுவை செலுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நோயாளிக்கு ஆக்சிஜன் செலுத்துவதற்கு முன்பு முறையாக பரிசோதிக்கப்படுகிறதா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
மதுரை,
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த கணேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கர்ப்பிணியாக இருந்த எனது மனைவி ருக்மணியை மருத்துவ பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். அங்கிருந்த பெண் டாக்டர், எனது மனைவி வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிட்டு குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு கூறினார். அதன்படி கடந்த 2011-ம் ஆண்டில் எனது மனைவியின் கருவைக் கலைத்து குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் செய்த போது, கவனக்குறைவாக ஆக்சிஜனுக்கு பதிலாக நைட்ரஜன் ஆக்சைடு வாயுவை அதிகமாக செலுத்தி உள்ளனர்.
இதனால் என் மனைவியின் உடல்நிலை மோசமானது. பின்னர் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தேன். ஆனால் அவரை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்ய மறுத்துவிட்டனர். இதனால் கோமா நிலைக்கு சென்ற எனது மனைவியை மதுரை அரசு ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம். அங்கு சரியான தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
பின்னர் கோர்ட்டு உத்தரவின்பேரில் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அவர் கடந்த 2012-ம் ஆண்டு இறந்தார். எனவே எனது மனைவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுதொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு ஏதும் வழங்கப்பட்டுள்ளதா? தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுவதற்கு முன்பாக முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். முடிவில், இதுகுறித்து சுகாதாரத்துறை பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை ஏப்ரல் மாதம் 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story