பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மதுரை ஆவின் அதிகாரி தற்கொலை - காரணம் குறித்து பரபரப்பு கடிதம்; உடலை வாங்க மறுத்து போராட்டம்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மதுரை ஆவின் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை,
மதுரை ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி அருகே உள்ள நாவுக்கரசுநகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 35). இவர் மதுரை ஆவினில் வளர்ச்சி பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 3 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு மதுரை ஆவின் நிறுவனத்தில் இந்த ஆண்டிற்கான தணிக்கை நடைபெற்றுள்ளது. அப்போது, ஆவின் நிறுவனத்திற்கு பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக புகழேந்தி மீது தணிக்கை நடத்திய அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது மாத சம்பளத்தில் இந்த தொகையை பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த முறைகேடு புகார் தொடர்பாக கடந்த 7-ந்தேதி புகழேந்தியை அதிகாரிகள் பணியிடை நீக்கமும் செய்துள்ளனர். இதனால் அவர் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்த தகவலை அவர் தன்னுடைய மனைவி, உறவினர்கள் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று காலை விஜயலட்சுமி வெளியே சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த புகழேந்தி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நீண்ட நேரமாக புகழேந்தியின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்து ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு புகழேந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு புகழேந்தி எழுதி வைத்த கடிதமும் வீட்டில் இருந்துள்ளது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து அவரது உடலை பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையே, புகழேந்தி எழுதிய கடிதத்தில், ‘‘நேர்மையாக பணியாற்றிய என்னை திடீரென பணியிடை நீக்கம் செய்து விட்டார்கள். தணிக்கை தொடர்பாக எந்த வித கருத்தையும், விளக்கத்தையும் என்னிடம் கேட்கவில்லை. இந்த மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன்“ என எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் புகழேந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், புகழேந்தியின் சாவுக்கு காரணமான அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து உடலை பெற்றுச் சென்றனர்.
Related Tags :
Next Story