வழக்கு விசாரணைக்கு சென்ற சப்–இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது


வழக்கு விசாரணைக்கு சென்ற சப்–இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 13 March 2020 3:30 AM IST (Updated: 12 March 2020 7:40 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற சப்–இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் அருகே கீழ வண்ணான்விளை பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 63). இவருக்கு சொந்தமான ஒரு தென்னந்தோப்பு அந்த பகுதியில் உள்ளது. அந்த தோப்பில் அமைக்கப்பட்டு இருந்த முள்வேலிகளை அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான நாகமணி (48) என்பவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்ச்செல்வன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சப்–இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், கிருஷ்ணகுமார் ஆகியோர் கீழ வண்ணான்விளைக்கு சென்றனர். அங்கு அவர்கள் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது, நாகமணி வந்தார். அவரிடம் சப்–இன்ஸ்பெக்டர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆத்திரமடைந்த நாகமணி திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சப்–இன்ஸ்பெக்டர் சார்லஸ்சை குத்தினார்.

இதில் அவரது கன்னத்தில் கத்திக்குத்து விழுந்தது. உடனே, அருகில் நின்றவர்கள் நாகமணியை பிடிக்க முயன்றனர். ஆனால், நாகமணி போலீசாரை தகாத வார்த்தையால் பேசி விட்டு தப்பியோடினார்.

இதுயடுத்து காயமடைந்த சப்–இன்ஸ்பெக்டர் சார்லஸ் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சப்–இன்ஸ்பெக்டர் சார்லஸ் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி வழக்குப்பதிவு செய்து நாகமணியை கைது செய்தனர்.

Next Story