‘கடின உழைப்பு, முயற்சி தான் வாழ்வில் வெற்றி தரும்’ அரசு கல்லூரி விழாவில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பேச்சு
‘கடின உழைப்பு, முயற்சி தான் வாழ்வில் வெற்றி தரும்’ என்று அரசு கல்லூரி விழாவில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் கூறினார்.
சுரண்டை,
‘கடின உழைப்பு, முயற்சி தான் வாழ்வில் வெற்றி தரும்’ என்று அரசு கல்லூரி விழாவில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் கூறினார்.
முப்பெரும் விழா
சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் விளையாட்டு விழா, மகளிர் தின விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் ரா.ஜெயா தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் பரமார்த்தலிங்கம், அஜித், பழனிச்செல்வம், நாராயணன், மாரிப்பாண்டி, மனோரஞ்சிதம், மோகனகண்ணன், செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் வீரபத்திரன் அனைவரையும் வரவேற்றார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கல்வி, விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவ–மாணவிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
விழாவில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பேசியதாவது:–
கடின உழைப்பு
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். கல்வி கற்பதால் மட்டும் வேலை கிடைத்து விடாது. இடைவிடாத கடின உழைப்பு, முயற்சி, நேர்மை, போராடும் குணம், நேர்மறை எண்ணம், தோல்வி ஏற்படும்போது துவண்டு விடாமல் செயல்படுதல், கூட்டு முயற்சி ஆகியவை தான் வெற்றியை தரும்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மாணவர் பருவம் என்பது குறிப்பாக கல்லூரி மாணவர் பருவம் மிகவும் முக்கியமானது ஆகும். அரசு கல்லூரி என்பது சிறப்பான கல்வி பெற மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு ஆகும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலைநிகழ்ச்சிகள்
விழாவில் வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன், உடற்கல்வி இயக்குனர்கள் ஹமர்நிஷா, மதியழகன், ஸ்டெல்லா, சப்–இன்ஸ்பெக்டர் நித்யா, மாற்றுத்திறனாளிகள் கபடி அணியை சேர்ந்த மகேஷ், சகோதரி சண்முகசுந்தரம், வக்கீல்கள் மாடக்கண், செந்தூர்பாண்டியன், வெனிஸ்குமார், சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் பேராசிரியர் பழனிசெல்வம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story