முதல்-அமைச்சருக்கு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கோரிக்கை மனு அனுப்பி ஆர்ப்பாட்டம்


முதல்-அமைச்சருக்கு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கோரிக்கை மனு அனுப்பி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2020 4:00 AM IST (Updated: 12 March 2020 9:35 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சருக்கு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கோட்ட பொறியாளர் அலுவலகம் மூலமாக கோரிக்கை மனு அனுப்பி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர், 

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை தமிழக அரசு பணிக்காலமாக அறிவித்து பணப்பலன்கள் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.5,200, ரூ.20,200, தர ஊதியம் ரூ.1,900 என நிர்ணயம் செய்து ஊதிய அந்தஸ்தை உயர்த்தி வழங்க வேண்டும். 

நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை கைவிட்டு, அதனை அரசே ஏற்று நடத்த வேண்டும். பணி நீக்க காலத்திலும், பணிக்காலத்திலும் இறந்த சாலை பணியாளர்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் மூலமாக தமிழக முதல்- அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கத்தை நேற்று நடத்தினர்.

இதற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கோரிக்கை மனுவினை துறைமங்கலத்தில் உள்ள பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், கணக்காளர் ராஜராஜன் ஆகியோரிடம் வழங்கினர். இந்த கோரிக்கை மனு தமிழக முதல்- அமைச்சர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தின் முதன்மை இயக்குனர், தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோருக்கு கோட்ட பொறியாளர்கள் மூலம் அனுப்பப்பட்டது. 

பின்னர் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளைவலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மணிவேல், மாவட்ட செயலாளர் சி.சுப்ரமணியன், பொருளாளர் கருணாநிதி, மாவட்ட இணைச் செயலாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story