அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து-மாத்திரைகளை முழு விவரத்துடன் ஏன் வழங்குவதில்லை? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து-மாத்திரைகளை முழு விவரத்துடன் ஏன் வழங்குவதில்லை? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 13 March 2020 3:15 AM IST (Updated: 12 March 2020 11:45 PM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து-மாத்திரைகளை முழு விவரங்களுடன் ஏன் வழங்குவதில்லை? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ராஜு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள். எனவே சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் நோயாளிகளை பரிசோதித்த பின்னர் காலை, மதியம், இரவு மற்றும் உணவுக்கு முன், பின் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி மருந்துகளை வழங்குகின்றனர். ஆனால் மருந்தாளுனர்கள் அவை அனைத்தையும் உரிய குறிப்புகள் இன்றி ஒரே உறையில் போட்டு வழங்கி வருகின்றனர்.

இதனால் கல்வியறிவு இல்லாத பலர், முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது. டாக்டர்களின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளாவிட்டால் நோய் குணமாக வாய்ப்பில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை கோரிய போது, ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர், அச்சிட்ட கவர்களுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் செலவிட வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு உரிய மருந்துகளை வழங்கி, ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வது அரசின் கடமை. எனவே தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகளை நேரம் மற்றும் உணவுக்கு முன்பா-பின்பா? என்பதை குறிப்பிடும் வகையில் தனித்தனி உறைகளில் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சரவணன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகளை நேரம் மற்றும் உணவுக்கு முன்பா-பின்பா? என்பதை குறிப்பிடும் வகையில் ஏன் வழங்குவதில்லை? என கேள்வி எழுப்பினர்.

பின்னர் இது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Next Story