தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தொழிலாளி கைது


தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 13 March 2020 4:00 AM IST (Updated: 13 March 2020 12:06 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது70). கூலித் தொழிலாளி. இவருடைய மகன் அன்பழகன் (48) சுமைதூக்கும் தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், யமுனா என்ற மகளும் உள்ளனர். அன்பழகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப் படுகிறது. மேலும் அவருக்கு மனநிலையும் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் சித்ரா தனது மகளுடன் ஆயக்காரன்புலத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். அன்பழகன் தந்தை முருகையன், தாய் கமலாவுடன் வசித்து வந்தார்.

அடித்து கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அன்பழகன் வீட்டிற்கு வந்து தனது தாயார் கமலாவிடம் சாப்பாடு கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அங்கிருந்த தந்தை முருகையன் அவரை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அன்பழகன் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து முருகையனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முருகையன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தான மேரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story