ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை


ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 March 2020 10:15 PM GMT (Updated: 12 March 2020 7:31 PM GMT)

ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஊட்டி,

இந்தியாவில் கேரளா, கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. சீனாவை தொடர்ந்து உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலம் என்பதால் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அரசு பஸ்சில் பயணிகள் பிடிக்கும் கைப்பிடி, அமருமிடம் போன்றவற்றை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தார். அப்போது அரசு பஸ்கள் ஒவ்வொரு இடத்துக்கு சென்று திரும்பி வரும் போது ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி கொண்டு அடிப்பகுதி, உள்பகுதியை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். பணிமனைகளில் இரவில் நிறுத்தப்படும் பஸ்களுக்கு கட்டாயம் மருந்து தெளிக்க வேண்டும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் வளாகத்தில் குடிநீர் எந்திரத்தில் இருந்த டம்ளரை சுத்தம் செய்து, தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய 3 மொழிகளில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயணிகளுக்கு வழங்கினார். இதையடுத்து பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் இருக்கைகளை கிருமிநாசினி கொண்டு கலெக்டர் சுத்தம் செய்தார். முன்னதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் சுற்றுலா தலங்கள் தூய்மையாக வைக்கப்பட்டு வருகிறது. தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் தங்குபவர்கள் தங்களது பயண விவரங்களை சுகாதாரத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட மாநிலங்கள், நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் ஊட்டிக்கு வருவது மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரியில் எந்த சுற்றுலா தலமும் மூடப்படவில்லை. கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்பட வில்லை. இதனால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. சமூக வலைதளங்களில் ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாக வதந்தி பரப்புவது தெரியவந்து உள்ளது. இதுபோன்று வதந்தி பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளை ஒட்டி நீலகிரி வனப்பகுதிகள் அருகே கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். வனத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு வனப்பகுதிகளையொட்டி வசித்து வரும் மக்கள் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி, ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் முரளிசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story