பென்னாகரம் அருகே யானை தாக்கி விவசாயி பலி ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்


பென்னாகரம் அருகே யானை தாக்கி விவசாயி பலி ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 12 March 2020 11:00 PM GMT (Updated: 12 March 2020 7:57 PM GMT)

பென்னாகரம் அருகே, ஆடு மேய்க்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலியானார்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள வண்ணாத்திப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). விவசாயி. ஆடு மேய்க்கும் தொழிலாளியாகவும் வேலை பார்த்தார். இவர் நேற்று முன்தினம் ஒகேனக்கல் வனச்சரகத்திற்கு உட்பட்ட போடூர் சின்னாறு வனப்பகுதி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஆடு ஒன்று காட்டிற்குள் சென்றது. எனவே அந்த ஆட்டை தேடுவதற்காக முருகேசன் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு காட்டு யானை ஒன்று முருகேசனை துரத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முருகேசன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.

உடல் மீட்பு

வனப்பகுதியில் ஆடு மேய்க்க சென்ற முருகேசன் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை நேற்று தேடினர். மேலும் ஒகேனக்கல் வனத்துறையினருக்கும் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் வனத்துறையினர் போடூர் சின்னாறு வனப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு முருகேசன் யானை தாக்கி இறந்து கிடந்தார். பின்னர் முருகேசன் உடலை மீட்டனர். ஒகேனக்கல் வனத்துறையினர் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், சப்-இன்ஸ்பெக்டர் மாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த முருகேசனுக்கு சஞ்சீவி என்ற மனைவியும்,2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யானைகள் முகாம்

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான யானைகள் ஒகேனக்கல், தாசம்பட்டி, போடூர் சின்னாறு ஆகிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. ஒகேனக்கல் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு இல்லாமல் காடுகளில் இருந்து வெளியேறி வருவது வாடிக்கையாகி விட்டது. எனவே வனத்துறையினர் காடுகளை ஒட்டியுள்ள மக்களுக்கு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story