திருப்பூரில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம் கேரளா செல்லும் ரெயில்கள் வெறிச்சோடின


திருப்பூரில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம் கேரளா செல்லும் ரெயில்கள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 13 March 2020 4:15 AM IST (Updated: 13 March 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரளா செல்லும் ரெயில்களும் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

திருப்பூர்,

சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் தொடங்கிய உயிர் கொல்லி நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். மேலும் இந்த வைரஸ் தாக்கி இருப்பவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

முதலில் சீனாவில் பரவிய இந்த நோய் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோய் இதுவரை 40-க்கும் மேற்பட்டோரை தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளான வங்காளதேசம், நைஜீரியா, இலங்கை மக்களையும் திருப்பூரில் பார்க்க முடியும். இவர்கள் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் உள்ளனர். அது மட்டுமல்ல பின்னலாடைகளை வாங்க வெளிநாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் பலர் வருகை தருகிறார்கள்.

வேலைவாய்ப்பு தேடியும் தினமும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் பஸ் மற்றும் ரெயில்களில் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களால் திருப்பூரில் கொரோனா வைரஸ் பரவி விடுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருப்பூர் ரெயில் நிலையத்தில்தான் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்து இறங்குகிறார்கள்.

இதற்கிடையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் அந்த மாநில நிர்வாகம் சபரிமலை, தேக்கடி, மூணாறு உள்ளிட்ட இடங்களுக்கு வர வேண்டாம் என வெளிமாநிலத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக சென்னை, சேலம், திருப்பூர், கோவையில் இருந்து திருவனந்தபுரம், திரிச்சூர், எர்ணாகுளத்துக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு செய்த பலரும் டிக்கெட்டை ரத்து செய்துள்ளனர்.

இதுபோல் கேரளாவிற்கு செல்வதை பலரும் தவிர்த்ததால் முன்பதிவு இல்லாத ரெயில்களும் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடியபடி கேரளாவிற்கு சென்று கொண்டிருக்கிறது

ஆனாலும் வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்தில் வந்து இறங்குகிறார்கள்.இதன் காரணமாக திருப்பூரில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே வைரஸ் தாக்குதில் இருந்து தங்களை பாதுகாக்கும் வகையில் முகக்கவசம் அணிந்தபடி வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதையடுத்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்கிறார்கள். தற்போது திருப்பூர் பகுதிகளிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தபடி வெளியே செல்ல தொடங்கியுள்ளார்கள்.

இது குறித்து மாநகராட்சி நகர் நல அதிகாரி பூபதி கூறியதாவது:-

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் உள்பட பல இடங்களில் கிருமி நாசினி அதிகளவில் தெளிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் கூறி வருகிறோம். பொதுமக்கள் தும்மல், இருமலுக்கு பிறகும், உணவு தயார் செய்வதற்கு முன்பும், பின்பும் சாப்பிட்ட பிறகு என எந்தெந்த நேரம் எவ்வாறு கை கழுவ வேண்டும் என்பது உள்பட நோய் தொற்று ஏற்படாத வகையில் இருக்க கூடிய வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகிற இடங்களில் 30-க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள 120 பணியாளர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மருந்து தெளித்து வருகிறார்கள். இதுபோல் மாநகராட்சி சார்பில் ஒரு லட்சம் விழிப்புணர்வு நோட்டீசுகளும் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த நோட்டீசுகளும் ஆங்காங்கே வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், தியேட்டர், அங்காடிகள், பின்னலாடை நிறுவனங்கள் உள்ளிட்டவைகளிலும், அந்தந்த உரிமையாளர்களை தொடர்பு கொண்டு மருந்துகளை தெளிக்க அறிவுறுத்தியுள்ளோம். இதற்காக வாட்ஸ்-அப் குழுக்களும் தொடங்கியுள்ளோம். பள்ளி, கல்லூரிகளில் இந்த விழிப்புணர்வை மாணவ-மாணவிகளிடையே ஏற்படுத்த ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story